காமதேனுவிடம் இருந்து பால் பெருகி கிடைத்த வெண்ணெயை எடுத்து வசிஷ்டர் லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தல மூலவர் 'வெண்ணெய் பெருமான்' என்ற அழைக்கப்படுகிறார். வசிஷ்டர் இந்த லிங்கத்தை எடுத்து வேறொரு இடத்தில் வைக்க முயற்சி செய்தபோது லிங்கம் வராமல் சிக்கிக் கொண்டதால் இத்தலத்திற்கு 'சிக்கல்' என்ற பெயர் உண்டாயிற்று.
மூலவர் 'நவநீதேஸ்வரர்', 'வெண்ணெய் பெருமான்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன், அழகிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாள் 'வேல்நெடுங்கண்ணியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
இக்கோயிலில் கந்த சஷ்டிப் பெருவிழாவின்போது ஆறாம் நாள் சிங்காரவேலர், அம்பாளிடம் இருந்து வேல் வாங்கும் திருவிழா நடைபெறும். அப்போது வேலவரின் முகத்தில் இருந்து வியர்வைத் துளிகள் தோன்றுவதைக் காணலாம்.
எட்டுக்குடி, எண்கண், சிக்கல் ஆகிய மூன்று கோயில்களில் உள்ள முருகப்பெருமான் திருவுருவங்களை ஒரே சிற்பி செய்ததாகக் கூறுவர்.
இது கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று இக்கோயில்.
வசிஷ்டர், விசுவாமித்திரர், காமதேனு, முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|